பாலியல் வழக்கு: தலைமறைவாக இருந்த அந்தமான் தொழிலாளர் நல ஆணையாளர் கைது
|தலைமறைவாக இருந்த அவரைப்பற்றி துப்பு கொடுத்தால், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அந்தமான் போலீசார் அறிவித்து இருந்தனர்.
போர்ட்பிளேர்,
அந்தமான் அரசு தலைமை செயலாளராக இருந்தவர் ஜிதேந்திர நரைன். அரசு வேலை தருவதாக ஆசை காட்டி, ஒரு 21 வயது இளம்பெண், இவரது வீட்டுக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு ஜிதேந்திர நரைனும், வேறு சில அரசு உயர் அதிகாரிகளும் அப்பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
ஜிதேந்திர நரைன், வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டு, பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரும், அந்தமான் தொழிலதிபர் சந்தீப்சிங்கும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்தமான் தொழிலாளர் நல ஆணையராக இருந்த ஆர்.எல்.ரிஷி, இடைநீக்கம் செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரைப்பற்றி துப்பு கொடுத்தால், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அந்தமான் போலீசார் அறிவித்து இருந்தனர். இந்தநிலையில், நேற்று ஆர்.எல்.ரிஷி, சென்னையில் இருந்து விமானம் மூலம் போர்ட்பிளேர் வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.