அந்தமான் செல்லும் விமான பயணிகள், காலாவதியான கட்டுப்பாடுகளால் அவதி
|அந்தமான் செல்லும் விமான பயணிகள் காலாவதியான கொரோனா கட்டுப்பாடுகளால் அவதி அடைவதாக தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,
அந்தமான் செல்லும் விமான பயணிகள் காலாவதியான கொரோனா கட்டுப்பாடுகளால் அவதி அடைவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இதனால் பல்வேறு மாநிலங்கள், பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தி விட்டன. ஆனால் சில யூனியன் பிரதேசங்கள், கொரோனா கால கட்டுப்பாடுகளை விமான பயணிகளுக்கு அமலில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அந்த வகையில் அந்தமான் நிகோபாரில் உள்ள போர்ட் பிளேருக்கு விமான பயணம் மேற்கொள்கிற சுற்றுலா பயணிகளுக்கு இன்னும் கொரோனா கால கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.
போர்ட்பிளேருக்கு விமான பயணம் மேற்கொள்கிறவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டிருக்காவிட்டால், பயணத்துக்கு 48 முதல் 96 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை 'நெகட்டிவ்' அறிக்கையை (ஆர்டிபிசிஆர்) வைத்திருக்க வேண்டும். அப்படியில்லா விட்டால், அவர்கள் அங்கே தரையிறங்கியதும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை செய்து கொண்டு விட வேண்டும்.இதை தெற்கு அந்தமான் துணை கமிஷனர் சுனீல் அஞ்சிபாகா உறுதி செய்துள்ளார்.
லே நகரத்திலும் கட்டுப்பாடு
இதே கட்டுப்பாடு, லடாக் யூனியன் பிரதேசம் லே நகரிலும் பின்பற்றப்படுகிறது.இதை லே நகர சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோட்டுப் டோர்ஜே உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "சுற்றுலா பயணிகளுக்கு நாங்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்துகிறோம்" என தெரிவித்தார்.
பயணிகள் அவதி
கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை வைத்திருப்பது பயணிகளை அவதிக்குள்ளாக்குகிறது.
இதையொட்டி, அந்தமானுக்கு குடும்பத்துடன் சென்று வந்த சஞ்சய் என்பவர் கருத்து தெரிவிக்கையில், "நான் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருடன் போர்ட் பிளேர் சென்றேன். எங்களை அங்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். இதற்கான கட்டணத்தை நாங்கள் செலுத்த வேண்டியதாயிற்று. இது எங்களுக்கு கூடுதல் சுமையாகி விட்டது. காலாவாதியான பயண கட்டுப்பாடுகளை விமான நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றொரு பிரச்சினை ஆகும்" என தெரிவித்தார்.
விமான நிறுவனங்கள் தகவல்
இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளத்தில் வெவ்வேறு மாநில அரசுகள், தங்கள் விமான நிலையங்களில் வந்திறங்குகிற பயணிகளுக்கு மாறுபட்ட வழிகாட்டும் விதிமுறைகளை அமல்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் கடந்த 9-ந் தேதிதான் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் பல மாநில சுகாதார அதிகாரிகள், இந்த கட்டுப்பாடுகள் நீண்ட காலத்துக்கு முன்பாகவே திரும்பப்பெறப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.
நாகலாந்திலும் பயண கட்டுப்பாடு உள்ளதாக இணைய தகவல்கள் கூறுகின்றன.ஆனால் மாநில சுகாதார உயர் அதிகாரி நியான் கிகான் கூறும்போது, "காலாவதியான கட்டுப்பாட்டு விதிமுறைகள் உள்ளன. ஆனால் நாங்கள் யாரும் தடுப்பூசி போட்டிருந்தாலும், போடாவிட்டாலும் கொரோனா பரிசோதனை செய்யுமாறு கூறுவதில்லை" என தெரிவித்தார்.ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனமும், தனது இணையதளத்தில் ஸ்ரீநகர் (காஷ்மீர் தலைநகர்) செல்கிறவர்கள், தடுப்பூசி சான்றிதழ் இல்லாத பட்சத்தில், அவர்கள் கொரோனா பரிசோதனை 'நெகட்டிவ்' அறிக்கை வைத்திருக்க வேண்டும் அல்லது வந்து சேர்ந்த பின்னர் கொரோனா துரித பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.ஆனால் இதுபற்றி காஷ்மீர் கண்காணிப்பு அதிகாரி டாக்டர் சையத் மன்சூர் காத்ரி கூறும்போது, "இது புதுப்பிக்கப்பட்ட நிலைப்பாடு அல்ல. நாங்கள் இப்போது யாரிடமும் எந்த சான்றிதழும் கேட்பதில்லை" என தெரிவித்துள்ளார்.