ஒரே நாளில் அரசு அதிரடி உத்தரவு; விஜயநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்ட ஆனந்த்சிங் மாற்றம்
|விஜயநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்ட ஆனந்த்சிங் ஒரே நாளில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மந்திரி சசிகலா ஜோலே, விஜயநகர் பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
பெங்களூரு:
ஆனந்த்சிங் நியமனம்
கர்நாடகத்தில் மாவட்ட பொறுப்பு மந்திரிகளை நியமித்து கடந்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி மாலையில் அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, கொப்பல் மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்த ஆனந்த்சிங், விஜயநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனந்த்சிங்கின் சொந்த ஊர் விஜயநகர் மாவட்டம் ஆகும். அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களே, மாவட்ட பொறுப்பு மந்திரிகளாக நியமிக்க கூடாது என்று பா.ஜனதா கட்சி முடிவு செய்திருந்தது.
ஆனால் மற்ற மந்திரிகளுக்கு, அவர்களது சொந்த மாவட்டம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், ஆனந்த்சிங்கை மட்டும் அவரது சொந்த மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமித்ததால், மற்ற மந்திரிகள் அதிருப்தி அடைந்திருந்தனர். ஆனாலும் மந்திரி ஆனந்த் சிங் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
ஒரே நாளில் அதிரடி மாற்றம்
ஆனால் ஆனந்த்சிங்கின் மகிழ்ச்சி ஒருநாள் மட்டுமே நீடித்தது. அதாவது அரசு பிறப்பித்த உத்தரவு நேற்று முன்தினம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது விஜயநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டு இருந்த ஆனந்த்சிங் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக மந்திரி சசிகலா ஜோலே அந்த மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனந்த்சிங் கொப்பல் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட பொறுப்பு மந்திரிகள், தங்களது மாவட்டத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்க வேண்டி இருப்பதால் மாவட்ட பொறுப்பு மந்திரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.