"அந்த நாள் வெகு தொலைவில் இல்லை"- இந்திய பொருளாதாரம் குறித்து ஆனந்த் மகேந்திரா டுவீட்
|இங்கிலாந்தை விஞ்சி உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மகேந்திரா. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், நாட்டில் திறமையானவர்களை அடையாளம் கண்டு கவுரவிப்பதில் பெயர் போனவர். அவரின் சமூகவலைத்தள பதிவுகள் மக்கள் மத்தியில் பிரபலமடைவது வழக்கமாகும். அந்த வகையில் இந்திய பொருளாதாரம் குறித்து அவர் டுவீட் செய்துள்ளார்.
இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்து வரும் சூழலில், இந்தியா உலகிலேயே முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக வளர்ச்சி காணும் என ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஐஎஃப்சி குழுமத்தின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ள பதிவில், " இங்கிலாந்தை விஞ்சி உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. இது உலக முதலீட்டாளர்களின் பார்வையின் மையத்தில் இந்தியாவைத் கொண்டு சேர்த்துள்ளது.
நாம் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும் போது முதலீட்டாளர்களின் கவனம் எப்படிப் பெருகும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அந்த நாள் இன்னும் வெகு தொலைவில் இல்லை" என கூறியுள்ளார். சமீபத்தில் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.