< Back
தேசிய செய்திகள்
சோழ வரலாற்றின் முக்கியத்துவத்தை உலகிற்கு நாம் உரக்கச் சொல்லவில்லை- ஆனந்த் மகேந்திரா டுவீட்

Image Courtesy: PTI 

தேசிய செய்திகள்

சோழ வரலாற்றின் முக்கியத்துவத்தை உலகிற்கு நாம் உரக்கச் சொல்லவில்லை- ஆனந்த் மகேந்திரா டுவீட்

தினத்தந்தி
|
29 Sept 2022 7:56 PM IST

ஆனந்த் மகேந்திரா தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் குறித்து பதிவு செய்து உள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக் கலையின் புகழ் குறித்து வடிவமைப்பாளரான ஸ்ரவண்யா ராவ் பேசும் வீடியோ ஒன்றை ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஸ்ரவண்யா ராவ், தஞ்சை பெரிய கோயிலுக்கு நேரடியாக சென்று அதன் கட்டிடக் கலையின் சிறப்பு குறித்து விளக்குகிறார்.

அந்த வீடியோவில் ஸ்ரவண்யா ராவ் பேசுகையில் , "11-ம் நூற்றாண்டில் கட்டிய சோழர் கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலில் நாம் உள்ளோம். ராஜ ராஜ சோழன் கட்டிய கோயில் இது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக இந்த கோயில் விளங்குகிறது. எந்தவித இயந்திரமும் இல்லாத அந்த காலத்தில் இந்தக் கோயிலை ஆறு கிலோ மீட்டருக்கு சாய்வு தளம் அமைத்து கோயில் கோபுரத்தை கட்டியுள்ளார்.

படம் வரைந்து அதன் அடிப்படையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பேரண்டத்தின் இடது வலது குறித்து இந்த கோவில் பேசுகிறது. ஆறு பூகம்பங்களை தாங்கி நிற்கிறது" என்றார்.

ஸ்ரவண்யா ராவ் பேசும் இந்த வீடியோவை பகிர்ந்து மகேந்திரா தெரிவித்துள்ள குறிப்பில், "திறமையான வடிவமைப்பாளர் ஸ்ரவண்யா ராவின் வழங்கியுள்ள அற்புதமான தகவல்கள் அடங்கிய வீடியோ இது. சோழப் பேரரசு எவ்வளவு சக்தி வாய்ந்தது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு முன்னேறியது என்பதை நாம் உண்மையில் உள்வாங்கவில்லை என்று நினைக்கிறேன். அதன் வரலாற்று முக்கியத்துவத்தை உலகிற்கு நாம் உரக்கச் சொல்லவில்லை" என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அந்த பதிவில் கமெண்ட் செய்யும் பலரும் ஆனந்த் மகேந்திராவை, நாளை வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்குமாறு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்