விரைவில் பிரக்ஞானந்தாவுக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி ரக கார்..! ஆனந்த் மகிந்திரா அறிவிப்பு
|பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் பரிசாக வழங்கப்பட உள்ளதாக மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில், டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி நம்பர் ஒன் வீரரான நாரே நாட்டின் கார்ல்சன் மகுடம் சூடினார். நாக் அவுட் உலகக்கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன் கோப்பையை பெறுவது இதுவே முதல்முறையாகும்.
டைபிரேக்கர் போட்டியின் முதல் சுற்றில் கார்ல்சன் வென்ற நிலையில், இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது. இறுதிப்போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா கார்ல்சனிடம் போராடி தோற்றார். இதன்மூலம் உலகக்கோப்பை 2 ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா, கேண்டிடேட் செஸ் தொடருக்கு தகுதி பெற்றார். 18 வயதில் செஸ் உலகக் கோப்பை இறுதி வரை முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பிரக்ஞானந்தா.
இந்நிலையில் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிக்கோப்பை வென்ற பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக அளிக்கவிருப்பதாக மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள (டுவிட்டர்) பக்கத்தில், "பிரக்ஞானந்தாவுக்கு பலரும் மகிந்திரா தார் காரை பரிசளிக்க வேண்டும் என கோருகிறார்கள். அவர்களது உணர்வு எனக்கு புரிகிறது. ஆனால், என்னிடம் மற்றொரு யோசனை உள்ளது. வீடியோ கேம்களின் மோகம் அதிகரித்துள்ள போதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி அவர்கள் இந்த விளையாட்டை தொடர அவர்களுக்கு ஆதரவளிப்பதை ஊக்குவிப்பதை விரும்புகிறேன்.
இது எலெக்ட்ரிக் கார்களைப் போலவே நமது கிரகத்திற்கும் சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடு. எனவே, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி, ரமேஷ்பாபு ஆகியோர் தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்ததற்காகவும், அயராத ஆதரவை வழங்கியதற்காகவும் அவர்கள் நம் நன்றிக்கு உரியவர்கள்" என்று அதில் ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார்.