< Back
தேசிய செய்திகள்
ஆனைகுளம் வனப்பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் - சுற்றுலா பயணிகள் கோரிக்கை
தேசிய செய்திகள்

ஆனைகுளம் வனப்பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் - சுற்றுலா பயணிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
13 Aug 2022 9:37 AM IST

காட்டு யானைகள் கூட்டத்தை கண்டு ரசிக்கும் வகையில், ஆனைகுளம் வனப்பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கேரளா:

இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஆனைகுளம் வனப்பகுதியில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அங்கு காட்டு யானைகள் கூட்டமாக தண்ணீர் குடிப்பதற்காக நீர்நிலைகளுக்கு செல்கிறது. குறிப்பாக ஆனைகுளம் ஆற்றுக்கு வரும் யானைகள், அங்கு மாலை நேரத்தில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது.

மேலும் அப்பகுதியில் காரை வரை நிற்கின்றன. அதன் பின்னர் வனப்பகுதிக்குள் சென்று உணவு தேடி வருகிறது. ஆனைகுளம் நகரில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஆனைகுளம் ஆறு, மற்றும் வனப்பகுதிகள் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இடுக்கியில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. இருப்பினும், மூணாறு புகழ் பெற்ற சுற்றுலா தளமாக உள்ளதால், இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக வந்து செல்கின்றனர்.

அவர்கள் பசுமை தேயிலை தோட்டங்கள், இதமான காலநிலையை ரசிக்கின்றனர். ஆனால், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பது போன்றவற்றை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

இதனால் ஆனைகுளம் ஆற்றில் யானைகள் தண்ணீர் குடிப்பது மற்றும் அதன் கூட்டத்தை பார்வையிட வசதியாக, ஆற்று கரையோர பகுதிகளை சுற்றுலா தலமாக விரிவுபடுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, ஆனைகுளம் ஆற்றில் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து தண்ணீர் குடிப்பது கண்கொள்ளா காட்சியாக அமைந்து உள்ளது. இந்த பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்தினால், மூணாறு வரை வரும் சுற்றுலா பயணிகள் ஆனைகுளம் பகுதிக்கு ஏராளமானோர் வருகை தருவார்கள்.

மேலும் உலக சுற்றுலா தலத்தில் ஆனைகுளம் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து, ஆனைகுளம் வனப்பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்