பைந்தூரில், தொழிற்பேட்டை அமைக்கப்படும்; ராகவேந்திரா எம்.பி.தகவல்
|கர்நாடக சிறுதொழில் வளர்ச்சி வாரியம் சார்பில் உடுப்பி அருகே பைந்தூரில் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக ராகவேந்திரா எம்.பி. தெரிவித்துள்ளார்.
மங்களூரு;
ராகவேந்திரா எம்.பி. பேட்டி
சிவமொக்கா தொகுதி எம்.பி.யும், எடியூரப்பாவின் மகனுமான ராகவேந்திரா உடுப்பியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகே கங்கொல்லி மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் பெரிதும் பயனடையும். மேலும் வருங்காலங்களில் கங்கொல்லி மீன்பிடித்துறைமுகம் ஒரு முக்கிய வணிக மையமாக இருக்கும்.
தொழிற்பேட்டை
கர்நாடக மாநில சிறுதொழில் வளர்ச்சி வாரியம், சிறுதொழில்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் பைந்தூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது. இதற்காக உடுப்பி மாவட்ட நிர்வாகத்திடம் நிலம் கண்டறியும்படி உத்தரவிடப்பட்டது.
அதன்படி தற்போது 19 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பேட்டை மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.