அத்திப்பழம் சாகுபடி செய்து அசத்தும் பட்டதாரி பெண்
|சிக்பள்ளாப்பூர் தாலுகாவில் அத்திப்பழம் சாகுபடி செய்து பட்டதாரி பெண் ஒருவர் அசத்தி வருகிறார். அவர் மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறார்.
கோலார் தங்கவயல்
பட்டதாரி பெண்
சிக்பள்ளாப்பூர்(மாவட்டம்) தாலுகா சாதலி கிராமத்தை சேர்ந்தவர் நவ்யாஸ்ரீ. பட்டதாரியான இவர் தனியார் நிறுவனங்களில் வேலை தேடாமல் விவசாயத்தில் ஆர்வமாக இருந்தார்.
இதையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த சில பெண்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் ரூ.2 லட்சம் செலவு செய்து ஸ்பெயின் நாட்டு அத்திப்பழ செடிகளை நடவு செய்தார். 10 ஏக்கரில் 2,150 செடிகளை அவர் நட்டார்.
6 மாதங்களுக்கு பின் அந்த செடிகளில் அத்திப்பழம் காய்த்தது. அவற்றை ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.80-க்கு நவ்யாஸ்ரீ விற்பனை செய்து வருகிறார். இந்த பழம் ஸ்பெயின் நாட்டில் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதை அறிந்த நவ்யாஸ்ரீ ஸ்பெயின் நாட்டிற்கு தற்போது அத்திப்பழங்களை ஏற்றுமதி செய்து வருகிறார். ரூ.2 லட்சம் செலவிட்டு மாதந்தோறும் ரூ.3 லட்சத்தை நவ்யாஸ்ரீ சம்பாதிக்கிறார்.
பாராட்டு
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு சாதலி கிராமத்தில் உள்ள ஏராளமான பெண்களுக்கு அவர் வேலை வாய்ப்பை அளித்து வருகிறார்கள்.
இதை அறிந்த சிக்பள்ளாப்பூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேற்று நவ்யாஸ்ரீயின் அத்திப்பழ தோட்டத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அவர்கள் நவ்யாஸ்ரீயின் முயற்சியை வெகுவாக பாராட்டினார்கள்.
இது குறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை இயக்குனர் மஞ்சுநாத் கூறுகையில், 'நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாக சில இளைஞர்கள் கூறி காலத்தை கடத்தி வருகின்றனர்.
நவ்யாஸ்ரீ சுயமாக வேலையை தேடிக்கொண்டதுடன் பல பெண்களுக்கு வேலை அளித்து வருவது வரவேற்கத்தக்கது. இதேபோல் மற்றவர்களும் முயற்சிக்கவேண்டும்' என்றார்.