< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணியா?; குமாரசாமி பரபரப்பு பேட்டி
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணியா?; குமாரசாமி பரபரப்பு பேட்டி

தினத்தந்தி
|
13 Jun 2023 2:43 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைப்பது குறித்து குமாரசாமி பதிலளித்துள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சன்னபட்டணாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தேசிய அரசியல்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி வைப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசியலில் வதந்திகள் பரவுவது இயல்பு. இந்த கூட்டணி விஷயத்தை என்னிடம் யாரும் கூறவில்லை. அதுபற்றி நாங்கள் எங்கும் விவாதிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் குறித்து எங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். எந்த ரீதியில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

எனக்கு தேசிய அரசியலுக்கு செல்ல விருப்பம் இல்லை. கடந்த முறையே தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இருக்கவில்லை. கட்சி நிர்வாகிகளின் அழுத்தத்திற்கு பணிந்து நான் தேர்தலில் போட்டியிட்டேன். என் விஷயத்தை விடுங்கள், சில எம்.பி.க்கள், தேர்தலில் போட்டியிடுவது போதும் என்று பேசியுள்ளனர். அரசின் 5 உத்தரவாத திட்டங்கள் குறித்து பேச இன்னும் நேரம் உள்ளது.

இலவச மின்சாரம்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். ஆனால் திட்டத்தின் பயன்களை மக்களுக்கு எப்படி கொண்டு போய் சேர்க்கிறார்கள் என்பது முக்கியம். வாடகைதாரர்களுக்கு இலவச மின்சாரம் கிடையாது என்று கூறினர். அதன் பிறகு அவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்று கூறினர்.

வாடகை வீடுகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர், ஒப்பந்தம் செய்து கொள்வது இல்லை. இப்படி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த திட்டத்தை அறிவிக்கும்போது, எனக்கும் இலவசம், உங்களுக்கும் இலவசம் என்று கூறினர். இப்போது இந்த திட்டங்களை செயல்படுத்தி எவ்வாறு நிர்வகிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்