கர்நாடகம்-மராட்டியம் எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க அடுத்த வாரம் அனைத்துகட்சி கூட்டம்; முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவிப்பு
|கர்நாடகம்-மராட்டியம் இடையே மோதல் முற்றி வரும் நிலையில், எல்லை பிரச்சினை குறித்து அடுத்த வாரம் அனைத்துகட்சி கூட்டம் நடத்தப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
எல்லை பிரச்சினை
கர்நாடகம்-மராட்டியம் இடையே பெலகாவி எல்லை பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதாவது மராட்டிய எல்லையில் அமைந்துள்ள பெலகாவி மற்றும் மராத்தி மொழி அதிகம் பேசப்படும் 862 கிராமங்களை மராட்டிய மாநிலத்தில் சேர்க்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இரு மாநிலங்கள் இடையே இந்த எல்லை பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பெலகாவி உள்பட மராத்தி மொழி பேசப்படும் பகுதிகளை மராட்டிய மாநிலத்தில் இணைக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கருத்து கூறியுள்ளனர். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கர்நாடகத்தில் பிற கட்சிகளின் தலைவர்களும், மராட்டியத்தின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உச்சகட்டத்தை எட்டியது
இந்த விவகாரம் குறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில், "மராட்டியத்தில் உள்ள ஜாட் தாலுகா மக்கள், தங்கள் தாலுகாவை கர்நாடகத்துடன் சேர்க்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த வழக்கில் கன்னடம் அதிகம் பேசப்படும் சோலாப்பூர், அக்கல்கோட்டை பகுதியை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்று நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதம் எடுத்து வைக்கிறோம்" என்றார்.
இதற்கு மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பெலகாவி, கார்வார் மற்றும் 862 கிராமங்களை மராட்டியத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த எல்லை பிரச்சினையில் இரு மாநிலங்களை சேர்ந்த மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மற்றும் புனேவில் கர்நாடக அரசு பஸ்களில் அங்குள்ள மராட்டிய அமைப்பினர், மராட்டியத்திற்கு ஆதரவாகவும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை கண்டித்தும் வாசகங்களை எழுதினர். கர்நாடக அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் புனே நகரில் கர்நாடக பஸ் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக எல்லை பிரச்சினையில் கர்நாடகம்-மராட்டியம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக இரு மாநில எல்லையில் அமைந்துள்ள பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
உரிமைகள் உள்ளன
இந்த நிலையில் மராட்டிய அமைப்பினர் கர்நாடக அரசு பஸ்சை சிறைப்பிடித்து கல்வீசி தாக்கியது மற்றும் மராத்திய மொழியில் வாசகம் எழுதிய சம்பவத்துக்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மராட்டிய முதல்-மந்திரி உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசு பஸ்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரு மாநிலங்கள் இடையே அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தின் எல்லை மற்றும் மக்களை பாதுகாக்க நாங்கள் சக்திமீறி போராடுவோம். நியாயம் நமது பக்கம் உள்ளது. இரு மாநிலங்கள் இடையே அமைதியை நிலைநாட்ட மராட்டிய முதல்-மந்திரி அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்தியா. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனக்கே உரிய உரிமைகள் உள்ளன.
சட்ட போராட்டம்
மாநிலங்கள் சீரமைப்பு சட்டத்தின் கீழ் மாநிலங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவது அந்தந்த மாநிலங்களின் கடமை ஆகும். மாநிலங்கள் இடையே அமைதியை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். மராட்டிய முதல்-மந்திரி உடனடியாக நடவடிக்கை எடுத்து, கர்நாடகம்-மராட்டியம் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை குறைக்க வேண்டும்.
நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம். பெலகாவி எல்லை பிரச்சினை தொடர்பாக மராட்டிய மாநிலம் கடந்த 2004-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அதற்கு எதிராக கர்நாடகம் சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறது. எங்களின் முதல் வேலை, மராட்டியத்திற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவது தான்.
அனைத்துக்கட்சி கூட்டம்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தகுதி அடிப்படையில் ஏற்கத்தக்கது அல்ல. வழக்கு என்ற அடிப்படையில் அதன் மீது விசாரணை நடக்கிறது. மாநிலங்கள் பிரிக்கப்பட்ட விஷயத்தில் அரசியல் சாசனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கட்டும். இந்த எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதில் கர்நாடகத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.