இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரம்; கனடாவுக்கு நல்லதல்ல: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரத்தில், பயங்கரவாதிகளுக்கு இடம் அளிப்பது கனடாவுக்கு நல்லதல்ல என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் 9 ஆண்டு கால மோடி அரசு பற்றிய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று டெல்லியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை கனடாவில் கொண்டாடிய விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், இதில் பெரிய விவகாரம் தொடர்பில் இருக்கும் என நான் நினைக்கிறேன்.
யார் வேண்டுமென்றாலும் செய்ய கூடிய, வாக்கு வங்கி அரசியலுக்கான தேவையை கடந்து, நாம் புரிந்து கொள்ள தவறிய விசயம் என்னவென்றால்... பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ள ஒரு பெரிய விவகாரம் இதில் மறைந்து உள்ளது.
இது உறவுகளுக்கு நல்லதல்ல என நான் நினைக்கிறேன். கனடாவுக்கும் நல்லதல்ல என்று கூறியுள்ளார். கனடாவில் நடந்த ஏதோ ஒரு விசயம் என்றில்லாமல், அதிர்ச்சி தர கூடிய ஒன்று என கூறியுள்ளார்.
கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சி அணிவகுப்பு ஒன்றில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகத்தில் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படுகொலையை ஆதரிப்பது போன்று இந்த கண்காட்சி அணிவகுப்பு நடந்து உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
அதில் ரத்த காயங்களுடன் இந்திரா காந்தியின் சிலை வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. கனடாவில் நடந்த அணிவகுப்பு வீடியோ பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில், இதற்கு இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரன் மெக்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அதில், இந்தியாவின் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடுவது போன்ற நிகழ்ச்சி கனடாவில் நடந்துள்ளது என்ற தகவல் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. வெறுப்புணர்வுக்கோ அல்லது வன்முறையை கொண்டாடுவதற்கோ கனடாவில் எந்த இடமும் இல்லை. இந்த செயல்களை நான் உறுதியாக கண்டிக்கிறேன் என்று டுவிட்டரில் மெக்கே தெரிவித்து உள்ளார்.