தவறுதலாக வெடித்த கையெறி குண்டு; தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு
|கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மக்களவை தொகுதிக்குட்பட்ட பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கல்கம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே சி.ஆர்.பி.எப். வீரரின் கையெறி குண்டு தவறுதலாக வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவத்தில் சி.ஆர்.பி.எப். வீரர் தேவேந்திர குமார்(32) படுகாயமடைந்தார். அவரை உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் ஜக்தல்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த நிபுணர்கள் குழு ஒன்று கல்காம் கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர் தேவேந்திர குமாரின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான பஸ்தாரில் உள்ள தோபிகுடா கிராமத்தில் நாளை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.