< Back
தேசிய செய்திகள்
கின்னஸ் சாதனை முயற்சி: 108 மணி நேரத்தில் 75 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடக்கம்..!

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கின்னஸ் சாதனை முயற்சி: 108 மணி நேரத்தில் 75 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடக்கம்..!

தினத்தந்தி
|
3 Jun 2022 8:34 PM IST

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நோக்கில் 108 மணி நேரத்தில் 75 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

அமராவதி,

மராட்டிய மாநிலத்தில் அமராவதியின் லோனி கிராமத்திலிருந்து அகோலாவின் மானா கிராமம் வரையிலான 75 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையை 108 மணி நேரத்தில் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும்.

இன்று தொடங்கியுள்ள இந்த நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் ஜூன் 7 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கின்னஸ் புத்தகத்தைச் சேர்ந்த குழு ஒன்று அந்த இடத்தில் இருந்து சாலையின் கட்டுமானப் பணிகளை ஆவணப்படுத்தி வருகிறது.

கட்டுமானப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பிட்மினஸ் கான்கிரீட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் சுமார் 800 முதல் 1,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுப்பணித்துறை அஷ்குல், கத்தாரின் தோஹாவில் இதற்கு முன்பு சுமார் 242 மணி நேரத்தில் அதாவது 10 நாட்களில் 25 கிலோ மீட்டர் சாலையை அமைத்து சாதனை படைத்தது. தற்போது அந்த சாதனையை முறியடிக்க ராஜ்பாத் இன்ஃப்ராகான் தயாராகி வருகிறது. ராஜ்பாத் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் புனேவில் உள்ள உள்கட்டமைப்பு கட்டுமானத் துறையில் வலுவான பணிக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது வரலாற்று சாதனை படைக்க உள்ளது.

கட்டுமான நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டுப் பொறியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் நன்கு பொருத்தப்பட்ட குழு உள்ளது, அவர்கள் தரக் கட்டுப்பாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். தரக்கட்டுப்பாட்டுக்காக நன்கு பொருத்தப்பட்ட ஆய்வகமும் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் மூலம் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் செய்யப்படும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து தரம் பராமரிக்கப்படுகிறது. இதன் நோக்கம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிர்ணயித்த தரத்தின்படி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்வதே ஆகும்.

உலக சாதனை படைக்க அந்த அணி துல்லியமான திட்டமிடலை செய்துள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் திட்ட மேலாளர்கள், நெடுஞ்சாலை பொறியாளர்கள், தர பொறியாளர்கள், சர்வேயர்கள், பாதுகாப்பு பொறியாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் உள்ளனர். இயந்திரப் பணிகளை குறைபாடுகள் இல்லாமல் வைத்திருக்க, டாடா மோட்டார்ஸின் ஐந்து பொறியாளர்கள் மற்றும் ஐந்து நிர்வாகிகள் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவினர் தொடர்ந்து உபகரணங்களை கண்காணித்து வருகின்றனர்.

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் விழாவில் இந்த நெடுஞ்சாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்