< Back
தேசிய செய்திகள்
இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட அபகரிக்க முடியாது; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு
தேசிய செய்திகள்

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட அபகரிக்க முடியாது; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு

தினத்தந்தி
|
1 Jan 2023 3:39 AM IST

எல்லையில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாரும் அபகரிக்க முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

எல்லையில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாரும் அபகரிக்க முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உளவுப்பிரிவு பயிற்சி மையம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்துள்ளார். நேற்று முன்தினம் மண்டியாவில் மெகா பால் பண்ணை நிறுவனத்தை அவர் தொடங்கி வைத்ததுடன், பா.ஜனதாவின் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா ஆவதி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள மத்திய உளவுப்பிரிவு பயிற்சி மையத்திற்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

மேலும் இந்திய-திபெத் பாதுகாப்பு நிர்வாக அலுவலகம் மற்றும் வீரர்களுக்கான கட்டிடங்களை அமித்ஷா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

ஹிமாவீர் பட்டம்

இந்திய-திபெத் எல்லை பகுதியில் பணியாற்றும் நமது வீரர்கள் ஹிமாவீர் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பட்டம் பத்மபூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை விட பெரிதாகும். ஹிமாவீர் என்ற பட்டம் அரசால் வழங்கப்படுவதில்லை. இது நமது நாட்டு மக்கள் எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்காக அளிக்கும் பட்டமாகும்.

நமது வீரர்கள் எல்லையில் 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறாாக்ள். இந்த வெப்ப நிலையில் எப்படி பணியாற்ற முடியும் என்பதை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது. வலுவான மன உறுதியுடனும், உச்ச பட்ச தேசபக்தியும் இருந்தால் மட்டுமே நாட்டை பாதுகாக்க எல்லையில் பணியாற்றும் வீரர்களால் முடியும்.

ஒரு அங்குல நிலத்தை கூட...

இந்தோ-திெபத் மற்றும் சீன எல்லை பகுதியில் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை வீராகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால், நான் கவலைப்பட மாட்டேன். அவர்கள் மீது உறுதியாக இருக்கிறேன். எல்லையில் நமது வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாரும் அபகரிக்க முடியாது.

மத்திய ஆயுதப்படை வீரர்கள் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக, 100 நாட்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது வீரர்களுக்கு தேவையானதும், அவசியமானதும் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றார்கள்.

மேலும் செய்திகள்