வேளாண் துறையை மேம்படுத்தாமல் விவசாயிகளின் வருமானம் உயராது- அமித்ஷா
|வேளாண் துறையை மேம்படுத்தாமல் விவசாயிகளின் வருமானம் உயராது என உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி,
தேசிய மாநாடு
கூட்டுறவுத்துறை சார்ந்த தேசிய மாநாடு ஒன்று டெல்லியில் நடந்தது. இதில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் வேளாண் துறைக்கு அதிகமான நீண்டகால கடன்களை வழங்குமாறு வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகளை கேட்டுக்கொண்டார்.
மாநாட்டில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-
நீர்ப்பாசன திட்டங்கள்
வேளாண் துறையை குறிப்பாக நீர்ப்பாசனத்தை மேம்படுத்தாவிட்டால் விவசாயிகளின் வருமானம் உயராது. எனவே நாட்டில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு கூட்டுறவு வங்கிகள் அதிக கடன் வழங்க வேண்டும்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 49.4 கோடி ஏக்கர் விளைநிலம் கொண்ட இந்தியாவில், மொத்த விளைநிலமும் நீர்ப்பாசனம் பெற்றால் ஒட்டுமொத்த உலகுக்கே உணவளிக்கும் ஆற்றலை பெற முடியும்.
ஆனால் தற்போது நாட்டின் சுமார் 50 சதவீத விளை நிலம் பருவமழையை சார்ந்தே உள்ளது.
கடந்த 90 ஆண்டுகளாக இந்தியாவில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கிகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை நில அடமான வங்கிகளாக செயல்பட்டன. அத்துடன் 1924-ம் ஆண்டுக்கு முன்பு வரை விவசாயிகளுக்கு நீண்ட கால கடன்களும் வழங்கியவை.
நீண்ட கால கடன்
இந்த வங்கிகளை வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகளாக மாற்றிய பின், விவசாயிகள் பருவமழையை சார்ந்திருப்பது குறைந்தது. அப்படியே நீண்டகால கடன் திட்டங்களும் மெதுவாக உருவானது.
இந்த பயணத்தை நாம் பின்னோக்கி பார்த்தால், அதாவது கடந்த 90 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நீண்டகால கடன்கள் அதிகரிக்கவில்லை.
குறிப்பாக, நீண்ட கால அல்லது குறுகிய கால விவசாய கடன் வழங்குவது, நாட்டின் பல பகுதிகளில் முடங்கி உள்ளது. பல இடங்களில் சிறப்பாக செய்யப்பட்டு வந்தாலும், சில மாநிலங்களில் அது சிறப்பாக இல்லை.
எனவே அவற்றை நாம் புதுப்பிக்க வேண்டும். வேளாண் துறைக்கு குறிப்பாக நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிகமான நீண்டகால கடன்களை இந்த வங்கிகள் வழங்க வேண்டும்.
8 லட்சம் டிராக்டர்கள்
அதேநேரம் நீண்ட கால கடன் வழங்குவதிலும் அதிக தடைகள் இருக்கின்றன. எனினும் அந்த தடைகளை கூட்டுறவு மனப்பான்மையுடன் கடந்து விவசாய வளர்ச்சியை அடைய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கிகள் இதுவரை 3 லட்சம் டிராக்டர்களுக்கு மேல் கடனுதவி வழங்கி உள்ளன. ஆனால் இந்த இலக்கு 8 லட்சம் டிராக்டர்களாக இருக்க வேண்டும்.
இதைப்போல 5.2 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் இதுவரை நீண்டகால மற்றும் நடுத்தர கால கடனுதவி வழங்கப்பட்டு உள்ளன. ஆனால் இதைவிட அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை இலக்காக வைக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்கள் பற்றிய தரவுத்தளம் தற்போது நம்மிடம் இல்லை. மீன்பிடி துறையில் எத்தனை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன? எந்தெந்தப் பகுதிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இல்லாமல் உள்ளன என்பது தெரியாது.
எனவே இதற்கான தரவுகளை செயல்படுத்தத் தொடங்கினோம், இதன் மூலம் பெரிய அளவில் பயனடைவோம்,
இவ்வாறு அமித்ஷா கூறினார்.