மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விரைவில் அறிவிப்பு - அமித்ஷா
|மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விரைவில் அறிக்கப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 3வது முறை ஆட்சியமைத்து இன்று 100வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, உள்துறை மந்திரி அமித்ஷா, தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, பாஜக ஆட்சியில் இந்த 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், இனி மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் அமித்ஷா பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமித்ஷா கூறியதாவது,
இந்த அரசின் ஆட்சிகாலத்தின்போதே ஒரேநாடு ஒரேதேர்தல் முறை அமல்படுத்தப்படும். ஒரேநாடு ஒரேதேர்தலை சந்திக்க நாடு முன்வரவேண்டும். நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்' என்றார்.
இந்தியாவில் 1881ம் ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கவிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவில்லை.
கொரோனா பரவல் முடிவுக்கு வந்த நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது என்ற கேள்வி எழுந்து வருகிறது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டுமென பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அமித்ஷா கூறியுள்ளது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசின் கொள்கைகள், மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.