பசவராஜ் பொம்மைக்கு, அமித்ஷா உத்தரவு
|தட்சிண கன்னடாவில் நடைபெறும் தொடர் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
தட்சிண கன்னடாவில் நடைபெறும் தொடர் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
அமித்ஷா வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வருகை தந்திருந்தார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன், அமித்ஷா விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பசவராஜ் பொம்மைக்கு உத்தரவு
குறிப்பாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலை சம்பவங்கள், பா.ஜனதா பிரமுகர் கொலை குறித்தும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன், அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது தொடர் கொலை சம்பவங்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுபோன்று கொலை சம்பவங்கள் நடைபெறுவதன் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்றும், குறிப்பாக மக்களிடையே அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும், மக்கள் மத்தியில் அரசு பற்றி நல்ல எண்ணம் உருவாக வாய்ப்பில்லை, இது சட்டசபை தேர்தலில் நமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து கொள்வார்கள், அதனால் தட்சிண கன்னடா உள்ளிட்ட மாநிலத்தில் இதுபோன்ற தொடா் கொலைகள் நடைபெறாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அமித்ஷா அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.