''கோ-பேக் அமித்ஷா'' என்று விவசாயிகள் கோஷமிட்டதால் பரபரப்பு
|தார்வாரில் ‘‘கோ-பேக் அமித்ஷா’’ என்று விவசாயிகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உப்பள்ளி:
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வந்திருந்தார். அவருக்கு பா.ஜனதா கட்சியினர் தரப்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் விவசாய அமைப்புகள் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக உப்பள்ளியில் உள்ள கலசா பண்டூரி விவசாயிகள் போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் நேற்று துர்கா சர்க்கிள் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அமித்ஷாவின் புகைப்படம் அடங்கிய பதாகை வைத்து ''கோ-பேக் அமித்ஷா'' என்று கோஷமிட்டனர். மேலும் அவர்கள் மகாதாயி, கிருஷ்ணா நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றவேண்டும். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தவேண்டும் என்று கூறினர். இது குறித்து போராட்ட குழுவை சேர்ந்த சித்து தேஜி என்பவர் கூறும்போது:-
விவசாயிகள் பயிருக்கு ஆதரவு விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிகளவு நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தினால், அது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் நீர் நிலைகளை மேம்படுத்தவேண்டும். மகாதாயி நீர்ப்பாசனத்திட்டத்திற்கு வனத்துறையினரிடம் இருந்து டி.பி.ஆர் பெற்றதாக மாநில அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.
கிருஷ்ணா நதி திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த 2 திட்டங்களையும் மாநில அரசு உடனே நிறைவேற்றவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.