பிரதமர் மோடி ஒருங்கிணைந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்கியுள்ளார்; உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு
|கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தை வழங்கியுள்ளார் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
பெங்களூரு:
கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தை வழங்கியுள்ளார் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
ரூ.12 லட்சம் கோடி முறைகேடுகள்
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின பவள விழா ஆண்டையொட்டி மத்திய கலாசாரத்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் 'சங்கல்ப் சித்தி' நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மற்றும் மக்களை சென்றடையும் வகையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தி இருக்கிறார். ஆனால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சரியான முறையில் கொள்கைகள் வகுக்கப்படவில்லை. மேலும் பல்வேறு ஊழல்-முறைகேடுகள் நடைபெற்றன. ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றன. கடந்த 8 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத துறைகள் இருக்கிறதா?.
பசி போக்கப்பட்டன
ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனை மேம்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த பிரதமரை யாரும் பிரதமராக கருதவில்லை. ஒவ்வொரு மந்திரியும் தங்களை பிரதமராகவே கருதினர். விலைவாசி மிக அதிகமாக இருந்தது. எளிதாக தொழில் தொடங்குவது என்பது மிக மோசமான நிலையில் இருந்தது. அதனால் தான் நாடு முழு மெஜாரிட்டியுடன் பா.ஜனதாவை ஆட்சியை அமர்த்தியது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் மக்கள் காப்பாற்றப்பட்டனர். நாட்டில் இதுவரை 100 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு தலா 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை நிர்வகித்ததில் இந்தியா உலக தலைவராக மாறியுள்ளது. கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கி பசி போக்கப்பட்டன. கிராமப்புறத்தில் வீடு இல்லாத மக்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஊக்கம் அளிக்கிறது
புத்தொழில் தொடங்குவதற்கு மத்திய அரசு அதிக ஊக்கம் அளிக்கிறது. அறிவுசார் சொத்து பாதுகாப்பு குறித்த விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி., ஏற்றுமதி-இறக்குமதி துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் இந்தியா இன்று மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
பின்னர் அவர் கர்நாடக பால் கூட்டமைப்பு நிறுவனத்தை பார்வையிட்டார்.