பா.ஜனதா பலவீனமாக உள்ள 144 தொகுதிகளில் வெல்வது எப்படி? - மத்திய மந்திரிகளுடன் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆலோசனை
|144 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து மத்திய மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பலவீனமாக உள்ள 144 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து அவற்றின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட மத்திய மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தொடர்ந்து 2-வது தடவையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதிலும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் நாடு முழுவதும் தொகுதி நிலவரத்தை அலசியபோது 144 தொகுதிகளில் பா.ஜனதா பலவீனமாகவும், வெற்றி பெறுவது கடினமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
இவற்றில் பெரும்பாலானவை கடந்த தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்த தொகுதிகளாக இருந்தாலும், வெற்றி பெற்ற தொகுதிகளும் உள்ளன. மேற்கு வங்காளம், மராட்டியம், தெலுங்கானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவை அமைந்துள்ளன.
அங்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் 3 அல்லது 4 தொகுதிகளுக்கு ஒரு மத்திய மந்திரி வீதம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். அந்த தொகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளர்களின் மனநிலையை அறியுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அவர்களும் தொகுதிகளுக்கு சென்று வந்து விட்டனர்.
பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல் ஆகிய அம்சங்களை ஆய்வு செய்தனர். வெற்றி பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் முடிவு செய்தனர்.
அமித்ஷா
இந்த நிலையில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பூபேந்தர் யாதவ், கிரிராஜ் சிங், ஸ்மிரிதி இரானி, பர்ஷோத்தம் ருபாலா, கஜேந்திரசிங் ஷெகாவத் உள்பட 25 மத்திய மந்திரிகளுடன் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். கட்சி தலைவர்கள் சிலரும் பங்கேற்றனர்.
அந்தந்த தொகுதிகளில் தாங்கள் செய்த பணிகள் குறித்து மத்திய மந்திரிகள் எடுத்துரைத்தனர். அவை பற்றி அமித்ஷாவும், நட்டாவும் விவாதித்தனர். வெற்றிவாய்ப்பை அதிகரிக்க யோசனைகளை தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட 144 தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்களை அதிகரிக்கவும், மத்திய அரசு திட்டங்களால் பலனடைந்த சமூகத்தினரை குறிவைத்து இழுக்கவும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
தொகுதிவாரியாக வாக்காளர்களின் சாதி, மதம், அவர்களின் விருப்பம், அதற்கான காரணங்கள் ஆகிய தகவல்கள் அடிப்படையில் விரிவான அறிக்கையை பா.ஜனதா தயாரித்துள்ளது.