கொல்கத்தாவில் அமித்ஷா தலைமையில் கிழக்கு பிராந்திய கவுன்சில் கூட்டம்; மம்தா பானர்ஜி, ஹேமந்த் சோரன் பங்கேற்பு
|மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் கொல்கத்தாவில் கிழக்கு பிராந்திய கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
25-வது கூட்டம்
மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை உள்ளடக்கி கிழக்கு பிராந்திய கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சிலின் 25-வது கூட்டம் நேற்று நடந்தது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் நடந்த இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதிலாக பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், ஒடிசா மந்திரி பிரதீப் அமத் ஆகியோர் அந்தந்த மாநிலங்கள் சார்பில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்ட விரோத ஊடுருவல், எல்லை தாண்டிய கடத்தல் மற்றும் இந்திய-வங்காளதேச எல்லை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு
காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. இந்த கூட்டத்தில் அமித்ஷாவுடன், உள்துறை அமைச்சக அதிகாரிகள் 5 பேரும் பங்கேற்றனர்.
கிழக்கு பிராந்திய கவுன்சில் கூட்டத்துக்குப்பின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை அவரது அறையில் அமித்ஷா சந்தித்து பேசினார். பின்னர் அவர் ஷில்லாங் புறப்பட்டு சென்றனார்.