< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர் நிலவரம்:  ஜூன் 24ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித்ஷா அழைப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மணிப்பூர் நிலவரம்: ஜூன் 24ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித்ஷா அழைப்பு

தினத்தந்தி
|
21 Jun 2023 11:29 PM IST

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க ஜூன் 24ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்

புதுடெல்லி,

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3-ந்தேதி மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

சுமார் 50 நாட்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே நாட்களை கழித்து வருகின்றனர். பா.ஜனதா தலைவர்களின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. அலுவலகம் சூறையாடப்பட்டது. துப்பாக்கி சூடு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்கின்றன.

மாநிலத்தில் நீடித்து வரும் கலவரம் தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனிடையே மணிப்பூரில் நிலவி வரும் நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தனர். அவர்கள் எழுதிய கடிதத்தில், பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கம் மீதும் நிர்வாகத்தின்மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறி இருந்தனர். குகி சமூக எம்.எல்.ஏக்கள் மற்றும் மைதேயி சமூக எம்.எல்.ஏக்களுக்கு இடையே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், மணிப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் மத்திய பாதுகாப்பு படைகளை ஒரே சீராக நிறுத்தி நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க ஜூன் 24ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடந்த பிறகு நடைபெறும் முதல் அனைத்துக் கட்சி கூட்டம் இதுவாகும்.

இந்த சந்திப்பு டெல்லியில் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம், தற்போதைய சூழ்நிலை மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசிப்பதாகும்.

மேலும் செய்திகள்