< Back
தேசிய செய்திகள்
நதி நீர் பங்கீடு பிரச்சினைகளில் தென்மாநிலங்கள் சுமுக தீர்வு காண வேண்டும்- அமித்ஷா
தேசிய செய்திகள்

நதி நீர் பங்கீடு பிரச்சினைகளில் தென்மாநிலங்கள் சுமுக தீர்வு காண வேண்டும்- அமித்ஷா

தினத்தந்தி
|
4 Sept 2022 12:56 AM IST

நதி நீர் பங்கீடு பிரச்சினைகளில் தென் மாநிலங்கள் சுமுக தீர்வு காண வேண்டும் என்று தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தினார்.

தென்மண்டல கவுன்சில் கூட்டம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, அந்தமான் நிகோபார், லட்சத்தீவு ஆகியவற்றைக் கொண்டு தென் மண்டல கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தென் மண்டல கவுன்சிலின் 30-வது கூட்டம் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அந்தமான் நிகோபார் துணை நிலை கவர்னர் தேவேந்திரகுமார் ஜோஷி, லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் பட்டேல், மாநில மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பினராயி விஜயன்

இந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசும்போது, "அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையின் ஒருங்கிணைந்த பட்டியலின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன் அவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார். மேலும், "போட்டிகள் இருக்கலாம். ஆனால் கலந்தாலோசனைகள், விவாதங்கள் மூலம் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒருமித்த கருத்து ஏற்படுத்த முடியும். இதுதான் ஆரோக்கிய கூட்டாட்சி ஜனநாயகத்தின் சாராம்சம் ஆகும்" என தெரிவித்தார்.

அமித்ஷா பேச்சு

கூட்டத்தினை தொடங்கி வைத்து அமித்ஷா பேசும்போது, கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து நடந்த கூட்டத்தின் நிறைவில் அமித்ஷா பேசும்போது கூறியதாவது:-

பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 8 ஆண்டுகளில் மண்டல கவுன்சில் கூட்டங்களின் இயல்பு மாறி உள்ளது. மண்டல கவுன்சில் கூட்டங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. தென்மாநிலங்கள் மீது பிரதமர் மோடி சிறப்பான பற்று வைத்துள்ளார்.

26 பிரச்சினைகளில் விவாதம்

இந்த கூட்டத்தில் 26 பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. 9 பிரச்சினைகளில் தீர்வு காணப்பட்டன. 17 பிரச்சினைகளில் மேலும் விவாதங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 9 பிரச்சினைகள் ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்தது தொடர்பானவை ஆகும். ஆந்திராவும், தெலுங்கானாவும் நிலுவையில் உள்ள தங்களது பிரச்சினைகளை பரஸ்பரம் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும்.

நதி நீர் பங்கீட்டில் சுமுக தீர்வு

நதி நீர் பங்கீடு பிரச்சினைகளில் தென்மாநிலங்கள் சுமுக தீர்வு காண வேண்டும்.

12 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்களுக்கு கியூஆர்கோடுடன் கூடிய பி.வி.சி. ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடலோர மாநிலங்களில் இருந்து வருகிற மீனவர்களின் அடையாளத்தை தெரிந்து கொள்ள உதவுவதோடு, கடல்பாதுகாப்பை வலுப்படுத்தும்.

போதைப்பொருட்கள் ஒழிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் மிகுந்த கண்டிப்புடன் செயல்பட்டு வருகிறது.

தடய அறிவியல் ஆய்வுக்கூடங்கள் அமைப்பது தொடர்பான கொள்கை தயாரித்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தண்டனை விகிதத்தை அதிகரிக்கும். ஒவ்வொரு 5 கிலோமீட்டரிலும் ஒரு வங்கிக்கிளையை அமைக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் இலக்கு ஆகும். 5 கிலோமீட்டரில் ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி வசதிகளை ஏற்படுத்த தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கும் மாநிலங்கள் முயற்சிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் தங்கள் கிளைகளைத் திறக்க வேண்டும். இது அரசின் நலத்திட்டங்களின் நிதி மக்களுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்குகளில் போய்ச்சேர உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்