< Back
தேசிய செய்திகள்
யாசின் மாலிக்கிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட பாக். வீரர் ஷாகித் அப்ரிடி - பதிலடி கொடுத்த அமித் மிஸ்ரா
தேசிய செய்திகள்

யாசின் மாலிக்கிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட பாக். வீரர் ஷாகித் அப்ரிடி - பதிலடி கொடுத்த அமித் மிஸ்ரா

தினத்தந்தி
|
25 May 2022 5:52 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டி குற்றச்சாட்டில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலிக் மீது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு டெல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என என்ஐஏ கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. யாசின் மாலிக்கிற்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. யாசின் மாலிக்கிற்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க வேண்டுமென என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல்கொடுப்பவர்களை இந்தியா தொடர்ந்து ஒடுக்க நினைக்கிறது. யாசின் மாலிக்கிற்கு எதிராக புனையப்பட்ட வழக்குகள் காஷ்மீரின் விடுதலைக்கான போராட்டத்தை தடுக்காது. காஷ்மீர் தலைவர்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் சட்டவிரோத வழக்குகளை ஐநா சபை கவனத்தில் கொள்ளவேண்டும்' என பதிவிட்டுள்ளார்.

யாசின் மாலிக் குறித்த ஷாகித் அப்ரிடியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஷாகித் அப்ரிடியின் டுவிட்டிற்கு பதில் அளித்துள்ள அமித் மிஸ்ரா, அன்புக்குறிய ஷாகித் அப்ரிடி, தான் செய்த குற்றங்களை யாசின் மாலிக்கே கோர்ட்டில் ஒப்புக்கொண்டுள்ளார். உங்கள் பிறந்த தேதியை போல அனைத்தும் தவறாக வழிநடத்தப்படுவதில்லை' என்றார்.

மேலும் செய்திகள்