முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டனுடன் கிரிக்கெட் விளையாடிய அமெரிக்க தூதர்
|விளையாட்டில் பாலின சமத்துவத்தில் ஊக்கமளிக்கும் நபரான மிதாலி ராஜை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் குறிப்பிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இரு நாடுகளின் கலாசார, நிதி மற்றும் வர்த்தகம் சார்ந்த முக்கிய பிரமுகர்களுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இதன்பின் இந்தியாவின் பல்வேறு பன்முக கலாசார பகுதிகளை பார்வையிட்டார். கேட்வே ஆப் இந்தியா எனப்படும் மும்பை நகரை சுற்றி பார்த்த அவர், நடைபயணம் செய்தபடி நகரை உலா வந்துள்ளார்.
இந்த பயணத்தில் அவர் இந்து கோவில், முஸ்லிம் மசூதி, ஜொராஸ்டீரியன் கோவில் மற்றும் ஒரு கத்தோலிக்க பல்கலை கழகத்திற்கும் சென்று உள்ளார். ஹெராஸ் மியூசிய மையத்தில் புத்த, கிறிஸ்தவ, ஜைன மற்றும் சைவ சிற்பங்கள் என்னை கவர்ந்தன என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மையங்கள் இருப்பது, மும்பையின் மத பன்முக தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான சான்றாக உள்ளன என அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
அவர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ் உடன் ஒன்றாக உற்சாகத்துடன் கிரிக்கெட் விளையாடினார்.
23 ஆண்டு கிரிக்கெட் விளையாட்டில் 10,868 ரன்களை குவித்து உலக சாதனை படைத்தவர் என அவரை பெருமையாக குறிப்பிட்டார். பின்னர் அவரிடம் பேட் ஒன்றில் கையெழுத்தும் வாங்கி கொண்டார். விளையாட்டில் பாலின சமத்துவத்திற்கான ஊக்கமளிக்கும் நபரான அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன் என குறிப்பிட்டு உள்ளார்.