சேர்ந்த ஒரே வாரத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அம்பத்தி ராயுடு
|கடந்த 28 ஆம் தேதி அம்பத்தி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அமராவதி,
ஆந்திராவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. இவர் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். மேலும் இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு சிஎஸ்கே அணியில் இணைந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
கடந்த 28 ஆம் தேதி அம்பத்தி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அவரை கட்சியில் வரவேற்று கட்சி சால்வை அணிவித்தார். விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அம்பத்தி ராயுடு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குண்டூர் மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் சேர்ந்த ஒரே வாரத்தில் கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக அம்பத்தி ராயுடு தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், 'ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்' என தெரிவித்துள்ளார்.