< Back
தேசிய செய்திகள்
அம்பானி இல்ல திருமண விழா; அத்துமீறி நுழைய முயன்ற தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது
தேசிய செய்திகள்

அம்பானி இல்ல திருமண விழா; அத்துமீறி நுழைய முயன்ற தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
14 July 2024 9:59 PM IST

அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்கான முறையான அழைப்பிதழ் இல்லாமல் நுழைய முயன்ற தொழிலதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இடையேயான திருமணம் நேற்று முன்தினம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து, திருமண நிகழ்ச்சி 3 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த திருமண நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் இன்று வரை மும்பையில் நடைபெறுகின்றன. இதனால், மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய பிரமுகர்கள் என உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதில், நேற்று சுப ஆசீர்வாத் நிகழ்ச்சி நடந்தது. திருமண கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக இன்று மங்கள உத்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு முன்பே அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அவற்றை அவர்கள் கொண்டு வரவேண்டும். பலத்த சோதனைக்கு பின்னரே விருந்தினர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்ள ஆந்திர பிரதேசத்தில் இருந்து 2 பேர் வந்துள்ளனர்.

அவர்களிடம் திருமணத்தில் பங்கேற்பதற்கான முறையான அழைப்பிதழ் இல்லை என கூறப்படுகிறது. இதனால், அத்துமீறி நுழைய முயன்றதற்காக போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களில் ஒருவர் வெங்கடேஷ் நரசைய்யா அல்லூரி (வயது 26) என்பதும் அவர் யூடியூபர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதேபோன்று லுக்மேன் முகமது ஷபி ஷேக் (வயது 28) என்ற மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு தொழிலதிபர் ஆவார்.

இருவருக்கு எதிராக தனித்தனியாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் நோட்டீஸ் வழங்கி விட்டு, சட்டப்படியான நடவடிக்கை எடுத்த பின்னர் போலீசார் அவர்களை விடுவித்தனர்.

மேலும் செய்திகள்