அமர்நாத் புனித யாத்திரை; மேகவெடிப்பில் காயமடைந்த பக்தர்களுக்கு கவர்னர் சின்ஹா ஆறுதல்
|அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பில் காயமடைந்து மீட்கப்பட்ட நபர்களை கவர்னர் மனோஜ் சின்ஹா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது.
மேகவெடிப்பு ஏற்பட்டதில் சிக்கி 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என காஷ்மீரின் கந்தர்பால் பகுதியை சேர்ந்த தலைமை மருத்துவ அதிகாரி ஏ. ஷா கூறியுள்ளார்.
தொடர்ந்து, காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.
அமர்நாத் குகை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட பகுதியருகே, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் இன்று காலை மீண்டும் மீட்பு பணியை தொடர்ந்தனர். 6 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன.
பட்டான் மற்றும் ஷரிபாபாத் பகுதியை சேர்ந்த தலா இரு மோப்ப நாய் படைகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதேபோன்று, காஷ்மீரின் சுகாதார சேவை இயக்ககம், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்பட அனைவரின் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது.
அதனுடன், அவர்களை உடனடியாக பணிக்கு வரும்படியும் உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தத்ரி நகரில் குந்தி வனத்தின் மலைபிரதேச பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பெருமழை கொட்டியுள்ளது.
இதில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சேற்றில் சில வாகனங்கள் சிக்கி கொண்டன. கார், ஜீப் உள்ளிட்டவற்றின் சக்கரங்கள் மண்ணில் புதையுண்டன. இதனை அடுத்து, வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் இயங்கி வருகின்றன.
இதுவரை நடந்த மீட்பு பணியில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பில் காயமடைந்து மீட்கப்பட்ட நபர்களில் ஒரு சிலர் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா நேரில் சென்று சந்தித்து அவர்களது உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார். இதன்பின் அவர்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.