< Back
தேசிய செய்திகள்
மக்களவையில் அமளி: ஜோதிமணி உட்பட 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
தேசிய செய்திகள்

மக்களவையில் அமளி: ஜோதிமணி உட்பட 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

தினத்தந்தி
|
14 Dec 2023 2:51 PM IST

எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த வாலிபர்கள், வண்ணப் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பாதுகாப்பு பணியாளர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜனநாயக கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்திற்குள் நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மக்களவையில் கரூர் எம்.பி. ஜோதிமணி உள்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் ஆகியோர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்