டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் அமளி; ஆம் ஆத்மி, பா.ஜ.க. பெண் கவுன்சிலர்கள் கடும் மோதல்
|டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. பெண் கவுன்சிலர்கள் இடையே அடிதடி, மோதல் ஏற்பட்டு அவை 5-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ந்தேதி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. ஆனால் தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் மேயரை தேர்வு செய்ய முடியவில்லை.
துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனையால் இந்த தேர்தலை நடத்த முடியவில்லை. நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது எனக்கூறி ஆம் ஆத்மி போர்க்கொடி உயர்த்தியது.
இதனால் மேயர் தேர்தலுக்காக 3 முறை மாநகராட்சி கூட்டம் நடந்தபோதும், ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே நிகழ்ந்த மோதலால் கூட்டம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதனால் மேயரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.
இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓப்ராய் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 17-ந்தேதி தீர்ப்பளித்தது. இதில் மாநகராட்சி தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என உத்தரவிட்ட நீதிபதிகள், 24 மணி நேரத்துக்குள் மாநகராட்சி கூட்டம் நடத்துவதற்கான நோட்டீஸ் வெளியிட வேண்டும் எனவும் அறிவித்தனர்.
இதனை அடுத்து, மேயர் தேர்தலுக்காக மாநகராட்சி கூட்டம் நேற்று நடத்துவதற்கு துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்தார். அதன்படி டெல்லி குடிமை மையத்தில் நேற்று காலையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் தேர்தல் நடந்தது.
இதில் ஆம் ஆத்மி தரப்பில் ஷெல்லி ஓப்ராயும், பா.ஜ.க. சார்பில் ரேகா குப்தாவும் போட்டியிட்டனர். மொத்தம் 266 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓப்ராய் 150 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க.வின் ரேகா குப்தாவுக்கு 116 ஓட்டுகள் கிடைத்தன.
இதன் மூலம் 34 வாக்குகள் வித்தியாசத்தில் ஷெல்லி ஓப்ராய் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இந்த சூழலில் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நேற்று இரவு நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு இருந்ததால் பா.ஜ.க. கவுன்சிலர்கள் தேர்தலை நடத்தவிடமால் அமளி செய்தனர். இதனால் ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.
அங்கிருந்த காகிதங்களை சுருட்டியும், தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்தும் ஒருவரை ஒருவர் தாக்கி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மேயர் மீதும் பா.ஜ.க. கவுன்சிலர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று தன்னை கட்டாயப்படுத்தினார்கள் என்றும், பா.ஜ.க. கவுன்சிலர்கள் தன்னை தாக்க முயன்றனர் எனவும் டெல்லி மேயர் தெரிவித்தார்.
இதனால், அவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. கவுன்சிலர்களின் கோஷங்களுக்கு மத்தியில் மாநகராட்சி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. எனினும், கூட்டத்தில் மீண்டும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
தொடர்ந்து இதுபோன்று அவை ஒத்தி வைக்கப்படுவதும், பின்னர் அவை மீண்டும் கூடுவதும் என 4 முறை நடந்தது. அதன்பின்னர், மாநகராட்சி கூட்டம் மீண்டும் தொடங்கியது. ஆனால், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து கடுமையான சண்டை ஏற்பட்டது.
பெண் உறுப்பினர்கள் தலைமுடியை பிடித்து, இழுத்தும், ஒருவரை ஒருவர் தள்ளி விடவும் செய்தனர். அவர்களை விலக்கி விட முயன்ற சில பெண் உறுப்பினர்கள் கீழே விழ கூடிய சூழலும் காணப்பட்டது.
ஆண் உறுப்பினர்கள் அவையில் கோஷங்களை எழுப்பியபடி காணப்பட்டனர். சிலர் மேஜை மீது ஏறி நடந்து செல்லவும் செய்தனர். இந்த தொடர் அமளியால் நேற்றிரவு 5-வது முறையாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், டெல்லி மாநகராட்சி அவை ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்தது.