< Back
தேசிய செய்திகள்
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்
தேசிய செய்திகள்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

தினத்தந்தி
|
13 Sept 2023 4:59 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதற்காக 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

இதுகுறித்து தேவஸ்தான தலைவர் பூமண கருணாகர் ரெட்டி கூறியதாவது:-

ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் சுத்திகரிப்பு நிகழ்ச்சியை அர்ச்சகர்கள் செய்தனர். ஆனந்த நிலையம் முதல் தங்கவாசல் வரை, கோவிலுக்குள் உள்ள உபகோவில்கள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது சுவாமியின் திருமேனி முழுவதும் துணியால் மூடப்பட்டிருந்தது.

விரிவான ஏற்பாடுகள்

சுத்திகரிப்புக்கு பிறகு, நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டா உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதையடுத்து, அர்ச்சகர்கள் சுவாமியின் திருமேனியை மூடியிருந்த துணியை அகற்றி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்கினர்.

ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் 11 மணிவரை 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டிருந்தது. பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேவஸ்தானத்தின் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்