< Back
தேசிய செய்திகள்
ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு அனுமதி; கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
தேசிய செய்திகள்

ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு அனுமதி; கர்நாடக அரசு அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
12 Oct 2022 3:29 AM IST

கர்நாடக அரசிடம் உரிய அனுமதி பெற்று ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்கலாம் என்றும், கிலோ மீட்டருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கவும் கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

ஆட்டோக்கள் பறிமுதல்

கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் சேவையை வழங்கி வருகின்றன. இதில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் இந்த நிறுவனங்களின் கார், ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அந்த நிறுனங்கள் வாடகை கார்களை மட்டுமே இயக்க அனுமதி பெற்றுள்ளதாகவும், ஆட்டோக்கள் சேவையை வழங்க அனுமதி பெறவில்லை என்றும் புகார் எழுந்தது. மேலும் ஆட்டோ பயண கட்டணமாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.100 வரை கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து கர்நாடக அரசின் போக்குவரத்து துறை கடந்த 7-ந் தேதி, ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்கள், ஆட்டோக்கள் இயக்க தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

போராட்டம்

அந்த நிறுவனங்கள் உரிய விளக்கத்தை அளிக்காததால், பெங்களூருவில் நேற்று முன்தினம் அந்த நிறுவனங்களின் ஆட்டோக்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த நிறுவனங்களின் ஆட்டோக்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை கண்டித்து அந்த ஆட்டோக்களின் உரிமையாளர்கள் பெங்களூரு ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பறிமுதல் செய்த ஆட்டோக்களை விடுவிக்க வலியுறுத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் பறிமுதல் செய்த ஆட்டோக்களை விடுவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்களின் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கா்நாடக அரசின் போக்குவரத்துத்துறை கமிஷனர் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்கள் ஆட்டோக்களை அனுமதி பெற்று இயக்க வேண்டும் என்றும், கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 நிர்ணயிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

அனுமதி பெறாமல் இயக்கியதால்...

கூட்டம் முடிந்த பிறகு போக்குவரத்துத் துறை கமிஷனர் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்கள் வாடகை கார்களை இயக்கி வருகின்றன. ஆட்டோக்களையும் இயக்குகிறார்கள். அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி பெறாமல் ஆட்டோக்களை இயக்கியதால் நடவடிக்கை எடுத்தோம். ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி நாளை (அதாவது இன்று) காலை விண்ணப்பிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ரூ.30 கட்டணம் நிர்ணயம்

கட்டணம் குறித்து ஆலோசனை நடத்தினோம். அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும். பயண கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ஜி.எஸ்.டி. உள்பட ரூ.30 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறினோம். அதைவிட அதிகமாக கட்டணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதை அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. பெங்களூருவில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை.

விதிகளை மீறி பைக் டாக்சி சேவையை வழங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களை இயக்க அந்த நிறுவனங்கள் விண்ணப்பித்தால் அதற்கு அனுமதி அளிப்பது குறித்து போக்குவரத்து மந்திரியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு குமார் கூறினார்.

மேலும் செய்திகள்