காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சாட்சியாக மாற அனுமதி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
|கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சாட்சியாக மாற கர்நாடக ஐகோர்ட்டு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
மனு தள்ளுபடி
கார்வார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் செயில். கடந்த 2012-ம் ஆண்டு அவரது நிறுவனத்தில் நடைபெற்ற சட்டவிரோத இரும்பு தாது தொடர்பான வழக்கில் செயில் உள்பட பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலர் தங்களை விடுவிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை அந்த கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய வேலசா என்பவர், இந்த வழக்கில் தான் சாட்சியாக மாற விரும்புவதாக கூறி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்று கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து செயில் எம்.எல்.ஏ. மற்றும் அவரது நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் தனது உத்தரவில் கூறி இருப்பதாவது:-
அனுமதித்தது சரியானதே
இந்த சட்டவிரோத இரும்பு தாது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சாட்சியாக மாற விரும்பியதை கீழ்கோர்ட்டு அனுமதித்தது சரியானதே. இத்தகைய பல்வேறு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு, இத்தகைய மனுக்களை அனுமதித்துள்ளது. அதனால் கீழ்கோர்ட்டு வேலசாவின் அனுமதியை அனுமதிக்கிறேன். அந்த கோர்ட்டு பிறப்பித்து உத்தரவில் தலையிட விரும்பவில்லை.
விசாரணைக்கு உதவுவதாக இருந்தால் குற்றம்சாட்டப்பட்டவர் சாட்சியாக மாறுவதை பரிசீலிக்க முடியும். சில வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சாட்சியாக மாறினால் தான் அதை வெற்றிகரமாக விசாரிக்க முடியும் என்ற நிலை இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த வழக்கின் விசாரணையை கீழ்கோர்ட்டு விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும். செயில் உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.