பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் விதிகளை மீறி போலீஸ் மந்திரி உள்பட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அதிரடி ரத்து
|பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில்(பி.டி.ஏ.) விதிகளை மீறி போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அந்த ஒதுக்கீடு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் பி.டி.ஏ. கமிஷனரும் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
பெங்களூரு:
சுப்ரீம் கோர்ட்டு
பெங்களூருவில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தால்(பி.டி.ஏ.) லே-அவுட்டுகள் நிறுவப்படுகின்றன. அதில் வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டு ஏலம் மூலம் தகுதியானவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் முழுமையாக மேம்படுத்தப்பட்ட பி.டி.ஏ. லே-அவுட்டுகளில் ஏலம் மூலம் மட்டுமே வீட்டுமனைகளை ஒதுக்க வேண்டும் என்றும், அவற்றில் 'ஜி' பிரிவு அல்லது மாற்று மனை திட்டம் மூலம் வீட்டுமனைகளை ஒதுக்க கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் இந்த உத்தரவை மீறி போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு முழுவதுமாக மேம்படுத்தப்பட்ட ஆர்.எம்.வி. லே-அவுட்டில் 97 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது.
பணி இடமாற்றம்
அப்போது நீதிபதிகள், 'சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி மேம்படுத்தப்பட்ட லே-அவுட்டுகளில் 'ஜி' பிரிவில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டது சரியல்ல. அங்கு ஏலம் மூலம் மட்டுமே வீட்டுமனை ஒதுக்க வேண்டும் என்ற தெளிவான உத்தரவு உள்ளது. அந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. உத்தரவை மீறியதற்காக பி.டி.ஏ. கமிஷனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ராஜேஷ் கவுடாவை உடனடியாக பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடுகிறோம். மேலும் கோர்ட்டு உத்தரவை மீறிய செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும்' என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் பெங்களூரு வளர்ச்சி ஆணைய (பி.டி.ஏ.) தலைவர் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வீட்டுமனை ஒதுக்கீடு ரத்து
சுப்ரீம் கோர்ட்டு, மேம்படுத்தப்பட்ட லே-அவுட்டுகளில் தாங்கள் வழங்கிய நிலத்திற்கு ஈடு செய்யும் வகையில் மாற்றுமனை ஒதுக்கீட்டாளர்களுக்கு வீட்டுமனையை ஒதுக்க கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை மனதில் வைத்து பி.டி.ஏ. அதிகாரிகள் வீட்டுமனை ஒதுக்கி இருக்க வேண்டும்.
இதில் அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டு ஆர்.எம்.வி. லே-அவுட்டில் வீட்டுமனைகளை ஒதுக்கியுள்ளனர். அதனால் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்பட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு 97 வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது ரத்து செய்யப்படும்.
பணி இடமாற்றம்
வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்கள் தாமாக முன்வந்து அதை ஒப்படைக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை ஒதுக்கப்படும். சட்டப்படி அவர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கியே ஆக வேண்டும். மேலும் தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை நாங்கள் அமல்படுத்துவோம். அதன்படி பி.டி.ஏ. கமிஷனர் ராஜேஷ் கவுடா பணி இடமாற்றம் செய்யப்படுவார்.
இவ்வாறு எஸ்.ஆர்.விஸ்வநாத் கூறினார்.
எதிர்ப்பு வலுத்ததால்...
இந்த நிலையில் நேற்று மாலையில் பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனராக இருந்த ராஜேஷ் கவுடா அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மின்சார துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் நாயக் பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் கூடுதல் பொறுப்பாக இந்த பணியை செய்வார் என்று அரசு அறிவித்துள்ளது.
மந்திரி அரக ஞானேந்திரா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட வீட்டுமனைகள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து எதிர்ப்பு வலுத்ததன் காரணமாக உடனடியாக அவை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முறைகேடு நடந்தது எப்படி?
பெங்களூரு மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு சில இடங்களில் கட்டிடங்கள், காலி வீட்டுமனை கையகப்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கு மாற்றாக பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள லே-அவுட்டுகளில் வீட்டுமனை ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு தான் இந்த முக்கிய பிரமுகர்கள் தங்களிடம் இருந்த குறைந்த மதிப்புடைய நிலத்தை பெங்களூரு மாநகராட்சியிடம் வழங்கிவிட்டு, அதற்கு பதிலாக அதிக விலை மதிப்புள்ள சுமார் 4 ஆயிரம் சதுரஅடி கொண்ட வீட்டுமனைகள் ஒதுக்கீட்டை பெற்றுள்ளனர். உதாரணமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை கொடுத்துவிட்டு, ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை பெற்றுக் கொண்டிருந்தனர். இவ்வாறு தான் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா மட்டுமின்றி பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.