மத்திய பட்ஜெட்: சுகாதார துறைக்கு ரூ.90,958 கோடி ஒதுக்கீடு - 3 புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு
|மத்திய பட்ஜெட்டில் 3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு ரூ.90 ஆயிரத்து 958 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 புற்றுநோய் மருந்துகளுக்கு முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
"புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, 3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. 'ட்ராஸ்டுசுமப் டெருக்ஸ்டெகான்', 'ஆசிமெர்டினிப்', 'டுர்வலுமப்' ஆகிய புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரி, 10 சதவீதத்தில் இருந்து பூஜ்யம் ஆக்கப்படுகிறது.
எக்ஸ்ரே எந்திரங்களில் பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே குழாய்கள், பிளாட் பேனல் டிடெக்டர்கள் ஆகியவற்றுக்கான அடிப்படை சுங்க வரியில் மாற்றம் செய்யப்படும். உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும், ஏற்றுமதி போட்டியை ஊக்குவிக்கவும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் இந்த வரிச்சலுகை அறிவிக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில், சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு, ரூ,80 ஆயிரத்து 517 கோடியில் இருந்து ரூ,90 ஆயிரத்து 958 கோடியே 63 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது, முந்தைய ஆண்டை விட 12.96 சதவீதம் அதிகம்.
இந்த நிதியில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ,87 ஆயிரத்து 656 கோடியே 90 லட்சமும், சுகாதார ஆராய்ச்சி துறைக்கு ரூ,3 ஆயிரத்து 301 கோடியே 73 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
'ஆயுஷ்' அமைச்சகத்துக்கான நிதிஒதுக்கீடு, ரூ,3 ஆயிரம் கோடியில் இருந்து ரூ,3 ஆயிரத்து 712 கோடியே 49 லட்சமாக உயர்த்தப்படும். மத்திய அரசின் சுகாதார திட்டங்களில், தேசிய சுகாதார திட்டம், ஜன ஆரோக்ய யோஜனா, தேசிய மனநல சுகாதார திட்டம், டெல்லி எய்ம்ஸ் போன்ற தன்னாட்சி அமைப்புகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றுக்கான நிதிஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.