பெங்களூரு: ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது
|பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில், ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில், ஐ.டி.பி.எல். ரோட்டில் ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இதில், கடந்த 1-ந்தேதி மதியம் 12.55 மணியளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.
இந்த சம்பவத்தில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வெடிகுண்டு வைத்த சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரை என்.ஐ.ஏ. இன்று கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் சபீர் என்பதும் அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சபீர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.