எல்லாம் ஒரு விளம்பரத்துக்காக... டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு புரளி விடுத்த வாலிபர்
|டெல்லி ஜானக்புரி பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 10.49 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு ஒன்றை வைத்திருக்கிறேன் என கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
இதனை தொடர்ந்து, விமான நிலையம் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டது. விமான நிலையத்தில் முழு அளவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. விமான நிலையம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
அது வெறும் புரளி என தெரிய வந்தது. இதன்பின்னர், தொலைபேசியில் அழைத்த எண்ணுக்கு பல முறை போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால், அதனை அந்நபர் எடுக்கவில்லை. தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், அந்நபர் குஷாக்ரா அகர்வால் (வயது 20) என தெரிய வந்தது.
அவருடைய வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, அவர் வீட்டில் இல்லை என தெரிய வந்தது. இதன்பின்னர், டெல்லி ஜானக்புரி பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில், 12-வது வரை அவர் படித்திருப்பதும், பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த புரளியை பரப்பியதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை செய்வதற்காக, குருகிராம் போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.