< Back
தேசிய செய்திகள்
பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அனைத்து கட்டணமும் தள்ளுபடி; 11 ஆண்டுகளாக அசத்தும் மருத்துவமனை
தேசிய செய்திகள்

பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அனைத்து கட்டணமும் தள்ளுபடி; 11 ஆண்டுகளாக அசத்தும் மருத்துவமனை

தினத்தந்தி
|
7 Nov 2022 7:07 AM IST

மராட்டியத்தில் 11 ஆண்டுகளாக மருத்துவமனை ஒன்றில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அனைத்து கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.



புனே,


மராட்டியத்தின் புனே நகரில் ஹடாப்சர் என்ற பகுதியில் பிரசவம் உள்ளிட்ட பன்னோக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் டாக்டர் கணேஷ் ராக், அரசின் பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தினை 11 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார்.

இதன்படி, இவரது மருத்துவமனையில் பிறக்க கூடிய பெண் குழந்தைகளுக்கு அனைத்து மருத்துவ கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதுபற்றி டாக்டர் கணேஷ் ராக் கூறும்போது, இதுவரை எனது மருத்துவமனையில் 2,430 பெண் குழந்தைகள் பிறந்து உள்ளன. அவர்களின் பெற்றோரிடம் சிகிச்சை கட்டணம் எதுவும் பெறவில்லை. பாலின வேற்றுமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, விழிப்புணர்வை உண்டாக்க இந்த முறையை பின்பற்றி வருகிறோம் என கூறியுள்ளார்.

இவரது மருத்துவமனையில் ஒவ்வொரு முறையும் பெண் குழந்தைகள் பிறக்கும்போது அதனை சிறப்புடன் கொண்டாடுகின்றனர். பலூன் மற்றும் பூக்களை கொண்டு அலங்காரம் செய்து, கேக் வெட்டி, பெற்றோர் மீது பூக்களை தூவியும் அனைவரும் அதனை மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். பெற்றோரை டாக்டர் கணேஷ் கவுரவிக்கவும் செய்கிறார்.

11 ஆண்டுகளாக இந்த நடைமுறையை கடைப்பிடித்து வருகிறேன் என கூறும் அவர், பிறந்த குழந்தை மற்றும் தாய் இருவரையும் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன், அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ஒன்றில் வீடு வரை கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்