தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரும் நலமுடன் உள்ளனர் - தமிழக அரசின் குழு தகவல்
|தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரும் நலமுடன் உள்ளதாக ஒடிசா சென்றுள்ள தமிழக அரசின் குழு தெரிவித்துள்ளது.
சென்னை,
கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் தமிழகர்கள் 30 பேர் முன்பதிவு செய்த நிலையில், 8 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தநிலையில், அதில் 2 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்திருந்தது. கோவையை சேர்ந்த நாரகணிகோபி, சென்னையை சேர்ந்த ஜெகதீசன் ஆகிய இருவரும் வீடு திரும்பினர்.
இதனால் தொடர்பு கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. மீதமுள்ள கார்த்திக், ரகுநாதன், மீனா, கல்பனா, அருண், கமல் ஆகிய 6 பேரின் நிலை குறித்து விசாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதனிடையே ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் ஒடிசா சென்றிருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழு, தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் சென்னை திரும்பினர்.
இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரும் நலமுடன் உள்ளதாக ஒடிசா சென்றுள்ள தமிழக அரசின் குழு தெரிவித்துள்ளது. முன்னதாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த 127 தமிழர்களில் 119 பேரின் பாதுகாப்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. மேலும் 6 பேர் பாதுகாப்பாக இருப்பதாக அவர்களுடன் பயணித்த சக பயணிகள் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரெயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் காயமடையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.