தேசிய செய்திகள்
ரூ.32 கோடி சிக்கிய விவகாரம்: ஜார்கண்ட் மந்திரி அதிரடி கைது

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ரூ.32 கோடி சிக்கிய விவகாரம்: ஜார்கண்ட் மந்திரி அதிரடி கைது

தினத்தந்தி
|
16 May 2024 4:05 AM IST

ரூ.32 கோடி சிக்கிய விவகாரத்தில் ஜார்கண்ட் மந்திரி அலம்கீர் ஆலமை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருப்பவர், அலம்கீர் ஆலம் (வயது 70). காங்கிரசை சேர்ந்த இவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் குமார் லால் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அப்பாது சஞ்சீவ் லாலின் வீட்டு வேலைக்காரர் ஜகாங்கிர் ஆலம் தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.32 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சஞ்சீவ் குமார் மற்றும் ஜகாங்கிர் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாநில ஊரக வளர்ச்சித் துறையில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் லஞ்சம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக மந்திரி அலம்கீர் ஆலமை ராஞ்சியில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். 9 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக அலம்கீரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்திய அதிகாரிகள், இறுதியில் அவரை கைது செய்தனர். இதற்கிடையே பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சீவ் குமார் மற்றும் ஜகாங்கிர் ஆலமை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு கோர்ட்டில் அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில் அவர்கள், சில செல்வாக்கு மிக்க நபர்களின் சார்பாக சஞ்சீவ் குமார் லால் கமிஷன் வசூல் செய்ததாகவும், ஊரக வளர்ச்சித்துறையில் மேலிருந்து கீழ் வரை அரசு அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கிழ் மந்திரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது ஜார்கண்ட் அரசில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்