மருமகனை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார் மாயாவதி...!
|ஆகாஷ் ஆனந்த் என்பவர் மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆவார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்தவர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். மாயாவதி திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது அவருக்கு 67 வயது ஆகிறது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு உத்தர பிரதேசம் தவிர ராஜஸ்தான் உள்பட பிற மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலுக்கு கட்சி தயாராவது குறித்து ஆராய்வதற்காக மாயாவதி தலைமையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இதனை அவர் அறிவித்தார். இவர் தான் தனக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சியை வழிநடத்துவார் என தெரிவித்தார். ஆகாஷ் ஆனந்த் என்பவர் மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆவார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட ஆகாஷ் ஆனந்த், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பட்டார். வாரிசு அரசியலை தீவிரமாக எதிர்த்துப் பேசி வந்த மாயாவதி, கடந்த 2019ம் ஆண்டு தனது சகோதரர் ஆனந்த் குமாரை தேசியத் தலைவராகவும், மருமகன் ஆகாஷை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தார்.
28 வயதாகும் ஆகாஷ் ஆனந்த் கடந்த 2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அரசியலுக்குள் நுழைந்தார். அதற்கு முன் 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் தனது அத்தையுடன் இணைந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவர் மாயாவதிக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படுகிறார்.
இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் விஸ்வநாத் பால் கூறுகையில், மாயாவதியின் அறிவிப்பைத் தொடர்ந்து கட்சிக்கு இளம் தலைவர் ஒருவர் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து பலவீனமாக உள்ள மாநிலங்களில் கட்சி அமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆகாஷ் ஆனந்த் கவனம் செலுத்துவார் என்று கூறினார்.