< Back
தேசிய செய்திகள்
கர்நாடக ஆளுநரை விட்டு சென்ற விமானம் -  மேலாளர் சஸ்பெண்ட்!
தேசிய செய்திகள்

கர்நாடக ஆளுநரை விட்டு சென்ற விமானம் - மேலாளர் சஸ்பெண்ட்!

தினத்தந்தி
|
31 July 2023 8:07 PM IST

கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஏறுவதற்கு முன்பாகவே விமானம் புறப்பட்ட விவகாரத்தில் ஏர் ஏசியா நிறுவன மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பெங்களூரு,

தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தில் நடக்கும்நிகழ்ச்சிக்காக, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், சில தினங்களுக்கு முன் பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு வருகை தந்தார்.

விமான நிலைய தகவலின்படி மதியம் 2.05 மணிக்கு பெங்களூரில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட ஏசியா விமானம் தயாராக இருந்தது.

'ஆனால், மதியம் 2:01 மணிக்கு தான் கவர்னர் வந்தார். விதிமுறைப்படி பாதுகாப்பு பரிசோதனை செய்ய 15 நிமிடங்கள் ஆகும். நான்கு நிமிடத்தில் அனைத்தும் முடியாது' என விமான அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து 90 நிமிடம் கழித்து தான், ஐதராபாதுக்கு அடுத்த விமானம் இருப்பதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கவர்னர், ஓய்வறைக்கு சென்று ஓய்வெடுத்தார். பின், 3.30 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

இதற்கு மறுப்பு தெரிவித்து கர்நாடக ராஜ்பவன் பாதுகாப்பு அதிகாரி வேணுகோபால் கூறியதாவது:

விமான நிலையத்திற்கு கவர்னர் 1:35 மணிக்கு சென்றடைந்து விட்டார். அவருக்கு, 'ஜி பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் கடைசியாக தான், விமானத்தில் ஏற வேண்டும்.

இதுகுறித்து விமான ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், நானே, கவர்னரின் உடமைகளை, விமான ஊழியரிடம் வழங்கினேன். 2:06 மணிக்கு கவர்னருடன் அங்கு சென்றோம். விமான கதவும் திறந்து தான் இருந்தது. ஆனால், உள்ளே செல்ல அனுமதி மறுத்து விட்டனர்.

பத்து நிமிடங்களுக்கும் மேலாக அவர்களிடம் விவாதித்தும் அனுமதிக்கவில்லை. 2:27 மணியளவில் தான் விமானமும் புறப்பட்டது. இது குறித்து தேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏர் ஏசியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'கவர்னர் இன்றி விமானம் புறப்பட்ட சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 'தொழில்முறை நெறிமுறைகளை கடைபிடிக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை, ஆளுநர் மாளிகையுடன் தொடர்பில் இருப்போம்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஐதராபாத் செல்ல இருந்த நிலையில், அவர் ஏறுவதற்கு முன்பாகவே விமானம் புறப்பட்ட விவகாரத்தில் ஏர் ஏசியா நிறுவன மேலாளரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

விமான போக்குவரத்து அமைச்சகத்தில் ஆளுநர் மாளிகை புகாரளித்த நிலையில் ஏர் ஏசியா நிறுவன அதிகாரிகள் நேரில் சென்று ஆளுநர் மாளிகையில் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்