விமான பணிப்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்
|4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்த வாலிபர் தள்ளிவிட்டு கொன்றதாக பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
கோரமங்களா:
4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்த வாலிபர் தள்ளிவிட்டு கொன்றதாக பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
விமான பணிப்பெண்
கோரமங்களா 8-வது பிளாக்கில் உள்ள ரேணுகா குடியிருப்பில் வசித்து வந்தவர் அர்ச்சனா திமன்(வயது 28). இவர் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். இவரும், கேரளாவை சேர்ந்த ஆதேஷ் என்ற சாப்ட்வேர் என்ஜினீயரும் திருமணமாகாமல் ஒரே வீட்டில் 7 மாதங்களாக கணவன், மனைவிபோல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அர்ச்சனா திமன், குடியிருப்புக்கு வந்தார். அன்று இரவு, அர்ச்சனாவுக்கும், என்ஜினீயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அர்ச்சனா திடீரென குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுபற்றி கோரமங்களா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொலை வழக்கு
இந்த நிலையில் தனது மகளை, ஆதேஷ் தான் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக அர்ச்சனாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகிறார்கள். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ஆதேசும், அர்ச்சனாவும் சம்பவத்தன்று படம் பார்க்க வெளியே சென்றனர். அவர்கள் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அர்ச்சனா உயிரிழந்தார். இதையடுத்து ஆதேஷ் போலீசாருக்கு தகவல் கொடுத்தது விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.