ஐப்பசி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
|ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை செய்கிறார். 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. அதே போல் நிலக்கல்லில் பக்தர்களின் வசதிக்காக உடனடி தரிசன முன்பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. கேரள அரசின் உத்தரவை தொடர்ந்து பக்தர்கள் முககவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டு உள்ளது.