இணையதளத்தில் சினிமாவை திருட்டுத்தனமாக வெளியிட தடை விதிக்கும் மசோதா - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
|இணையதளத்தில் சினிமாவை திருட்டுத்தனமாக வெளியிட தடை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திரைப்பட திருத்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு, திரைப்பட திருத்த மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், நிலைக்குழு சில சிபாரிசுகளை அளித்தது. அதைத்தொடர்ந்து, திரைத்துறையினர், பொதுமக்கள் ஆகியோருடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
வயது அடிப்படையில் சான்றிதழ்
அதன் அடிப்படையில், இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச நடைமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. சினிமாவை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட தடை விதிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது, திரைத்துறையினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். எந்த சர்ச்சையும் இன்றி, ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்தும்.
மேலும், திரைப்படங்களுக்கு யு, யுஏ, ஏ என்று சான்றிதழ் அளிக்காமல், வயது அடிப்படையில் சான்றிதழ் அளிக்கும் நடைமுறையும் புகுத்தப்படும்.
இந்த மசோதா, வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
6-வது நாடு
குவாண்டம் தொழில்நுட்பம் என்பது இயற்பியல் மற்றும் பொறியியலில் வளர்ந்து வரும் துறை ஆகும். தேசிய குவாண்டம் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பின்லாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே குவாண்டம் திட்டத்தை பின்பற்றி வருகின்றன. அதையடுத்து, குவாண்டம் திட்டத்தை கொண்டுள்ள 6-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
ரூ.6,003 கோடி செலவு
இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியதாவது:-
அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சியை வளர்க்கவும், குவாண்டம் தொழில்நுட்பத்தை வளர்க்கவும் தேசிய குவாண்டம் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், நடப்பு 2023-2024 நிதிஆண்டில் இருந்து 2030-2031 நிதிஆண்டுவரை ரூ.6,003 கோடியே 65 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும். இத்திட்டம், குவாண்டம் தொழில்நுட்ப துறையில் இந்தியாவை துள்ளிக்குதித்து முன்னேற செய்யும்.
மேலும், குவாண்டம் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று அவர் கூறினார்.