< Back
தேசிய செய்திகள்
மும்பையை உலகத்தின் பின்டெக் நகராக உருவாக்க இலக்கு: பிரதமர் மோடி பேச்சு
தேசிய செய்திகள்

மும்பையை உலகத்தின் பின்டெக் நகராக உருவாக்க இலக்கு: பிரதமர் மோடி பேச்சு

தினத்தந்தி
|
13 July 2024 10:12 PM IST

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை, 3 முதல் 4 ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கின்றது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புனே,

மராட்டியத்தில் சாலை, ரெயில்வே மற்றும் துறைமுகம் ஆகிய துறைகளுக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உள்ளார். இதன்படி மும்பை நகரில் ரூ.29,400 கோடிக்கும் கூடுதலான மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டி பேசினார்.

அவர் பேசும்போது, பெரிய அளவில் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை இந்தியாவின் தற்போதுள்ள தேவையாக உள்ளது. எங்களுடைய அரசு அந்த திசையில் பணியாற்றி வருகிறது. கொரோனா பெருந்தொற்று போன்ற காலத்தில் கூட சாதனை அளவாக வேலைவாய்ப்புகளை உருவாக்கினோம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை, 3 முதல் 4 ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கின்றது என்றார். அவர் தொடர்ந்து, மராட்டியத்திற்கு பெருமைமிகு வரலாறு உள்ளது. வலிமையான மாநிலம் என்பதுடன், வளம் நிறைந்த வருங்காலத்திற்கான கனவுகளையும் அது உள்ளடக்கி இருக்கிறது.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு பெரிய பங்கை மராட்டியம் கொண்டுள்ளது. தொழிற்சாலை, வேளாண்மை மற்றும் நிதி துறைகளில் அது ஆற்றல் மிக்கது. இதனால், நாட்டின் நிதி மையம் என்ற பெயர் மும்பைக்கு வந்துள்ளது.

இந்த ஆற்றலை கொண்டு உலகத்தின் பெரிய பொருளாதார மையம் ஆக மராட்டிய மாநிலம் உருவாவதற்கும் உலகத்தின் பின்டெக் நகராக மும்பையை உருவாக்கவும் வேண்டும் என நான் இலக்காக கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த பின்டெக் நகரம் என்பது, பல்வேறு நிதி சேவைகளை புதிய வழிகளில் வழங்குவதற்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது ஆகும்.

சமீபத்தில் வதாவன் துறைமுகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை குறிப்பிட்டு பேசிய அவர், ரூ.76 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தினால், 10 லட்சத்திற்கும் கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்