< Back
தேசிய செய்திகள்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவங்கள் வரையப்பட்ட சுவரை அகற்ற எதிர்ப்பு; அ.தி.மு.க.வினர் போராட்டம்
தேசிய செய்திகள்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவங்கள் வரையப்பட்ட சுவரை அகற்ற எதிர்ப்பு; அ.தி.மு.க.வினர் போராட்டம்

தினத்தந்தி
|
29 Jan 2023 2:49 AM IST

கோலார் தங்கவயல் சல்டானா சர்க்கிளில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உருவங்கள் வரையப்பட்ட சுவரை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயல் சல்டானா சர்க்கிளில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உருவங்கள் வரையப்பட்ட சுவரை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைவர்களின் ஓவியங்கள்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் சல்டானா சர்க்களில் இருந்து ஆண்டர்சன்பேட்டை கெம்பாபுரம் வரையில் 4 வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சல்டானா சர்க்கிள் அருகே அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினரால் சாலையோரத்தில் அம்பேத்கர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் சுவர்களில் வரையப்பட்டு உள்ளன.

தற்போது இப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் அ.தி.மு.க. தொண்டர்களால் வரையப்பட்ட தலைவர்களின் ஓவியங்களை அகற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

போராட்டம்

இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அம்பேத்கர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் உருவ ஓவியங்கள் அடங்கிய சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர். ஓவியங்கள் வரையப்பட்ட சுவர்களை அகற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் சமாதானம் பேசினர்.

அப்போது அ.தி.மு.க.வினர். 'அம்பேத்கர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஓவியங்களை இப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் இங்கு வரைந்தோம். ஆனால் சாலை விரிவாக்க பணிகள் என்ற பெயரில் அந்த சுவரை அகற்றுவது நியாயம் அல்ல.

அதிகாரிகள் ஒப்புதல்

எனவே இந்த ஓவியங்களை வேறு இடத்தில் வரைய மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்' என்றார். அதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதே பகுதியில் மற்றொரு சாலையோரத்தில் அம்பேத்கர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் உருவ ஓவியங்களை வரைய ஒப்புதல் அளித்தனர். அதன் பின்னர் போராட்டக்காரர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்