< Back
தேசிய செய்திகள்
அயோத்தி கும்பாபிஷேகம்: பா.ஜ.க. எம்.பி.யை ஊருக்குள் வரவிடாமல் தடுத்த பட்டியலின மக்கள்
தேசிய செய்திகள்

அயோத்தி கும்பாபிஷேகம்: பா.ஜ.க. எம்.பி.யை ஊருக்குள் வரவிடாமல் தடுத்த பட்டியலின மக்கள்

தினத்தந்தி
|
22 Jan 2024 1:14 PM IST

பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சின்ஹா பட்டியலின மக்களுக்கு எதிரானவர் என்றும், இதற்கு முன்பு தங்கள் கிராமத்திற்கு வந்ததில்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மைசூரு:

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலை செய்வதற்கு, கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து எடுக்கப்பட்ட கல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமர் சிலைக்கான கல் வழங்கிய கிராமத்திற்கு அந்த தொகுதியின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா சென்றார். பிரதிஷ்டை விழாவையொட்டி அங்கு சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். அப்போது அவரை அந்த கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் சிலர் சூழ்ந்து கொண்டு ஊருக்குள் வர விடாமல் தடுத்தனர். அவர் அந்த மக்களை புறக்கணித்து வருவதாகவும், அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

அவர் பட்டியலின மக்களுக்கு எதிரானவர் என்றும், இதற்கு முன்பு தங்கள் கிராமத்திற்கு வந்ததில்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

"நீங்கள் எங்கள் பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் செய்துள்ளோம். நாங்களும் ராமரை மதிக்கிறோம். தயவுசெய்து இங்கிருந்து போய்விடுங்கள்" என ஒரு நபர் கடுமையாக பேசினார்.

எம்.பி.யை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். எனினும் நிலைமை சரியில்லாததால், பிரதாப் சின்ஹா தனது காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்