"மனித நாகரீகத்தின் இதயம் விவசாயம்..." - ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
|ஐதராபாத்தில் நடைபெறும் ஜி20 நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் நடைபெறும் ஜி20 நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.
தெற்குலகில் விவசாயம் மொத்த ஜிடிபியில் 30 சதவீதம் வகிப்பதோடு மொத்த வேலைவாய்ப்பில் 60 சதவீதம் வகிப்பதாக குறிப்பிட்டார். மேலும் கொரோனா காரணமாக விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் உலகளாவிய அரசியல் சூழலால் மேலும் மோசம் அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், மனித நாகரீகத்தின் இதயமாக விவசாயம் திகழ்வதாகவும், மனித குலத்தின் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய பொறுப்பை ஜி20 நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் தற்போது இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருவதாகவும், இயற்கை விவசாயத்தை பயன்படுத்தி விவசாயிகள் பூமித்தாய்க்கு புத்துயிர் அளித்து மண் ஆரோக்கியத்தை பாதுகாத்து வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். மேலும், சிறுதானியங்கள் குறித்த சிறப்பான நடைமுறையை பகிர்ந்து கொள்ள சிறுதானியங்கள் ஆராய்ச்சி மையத்தை இந்தியா உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுமை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளை நாம் அதிகாரப்படுத்த வேண்டும் என தெரிவித்த பிரதமர், வேளாண் மற்றும் உணவுகள் வீணாவதை குறைக்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.